கர்நாடக மாநில பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி இன்று பெங்களூரு புறப்பட்டார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் விளம்பரம் ஒன்று கடந்த 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன. இது பாஜக மீது அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில பாஜக குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே தற்போது முதலமைச்சராக உள்ள சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்று இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் காரணமாக கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று நீதிமன்றத்தில், ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இன்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் பெங்களூருக்கு ராகுல் காந்தி கிளம்பினார். மதியம் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டது.