தூத்துக்குடி அருகே மீன் வியாபாரி உட்பட இருவர் நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவு கடையை மூடிய பின் கடையிலேயே படுத்து உறங்குவதை வெள்ளத்துரை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வெள்ளத்துரை தனது கடையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் வெள்ளத்துரையை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை வெள்ளத்துரையின் கடையின் அருகே இருந்த சாமி என்பவர் தடுக்க முயற்சி செய்துள்ளார். அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி உள்ளது. இந்த தாக்குதலில் சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
இந்த இரட்டை கொலை சம்பவங்கள் தொடர்பாக தகவல் அறிந்ததும் கோவில்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் கடைக்குள் படுத்திருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, படுகொலை செய்துள்ள சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.