விமான நிலையத்தில் நடிகை கங்கனாவை அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார்.
சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் குல்விந்தர் கவுர் அறைந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரனாவத் டெல்லி வரவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ரனாவத் கூறுகையில், “பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு நான் இரண்டாவது கேபின் வழியாகச் சென்றபோது சிஐஎஸ்எஃப் காவலராக இருந்த ஒரு பெண் என் முகத்தில் அறைந்தார். ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, தான் விவசாயிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக அந்தப் பெண் பதில் கூறினர். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை எப்படிச் சமாளிப்பது என்று கவலையாகவும் உள்ளேன்” என்றும் கங்கனா வீடியோவில் கூறியுள்ளார்.
கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் பெண் காவலர் குல்விந்தர் கவுர் 15 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்து வருகிறார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மேலும் விசாரிக்க சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண் காவலர் குல்விந்தர் கவுர் கூறுகையில், "100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.