நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் வரை நிதிஷ்குமார் டெல்லியிலேயே முகாம்?

By வ.வைரப்பெருமாள்

3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வரை, டெல்லியிலேயே தங்கியிருக்க பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது மற்றும் அமைச்சரவை இடங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

என்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி), நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), எச்.டி.குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் கடிதங்களை வழங்கினர்.

அடுத்து வரும் ஓரிரு நாள்களில் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் இன்று காலை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசிக்க உள்ளனர்.
புதிய அரசில், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

மக்களவையில் சபாநாயகர் பதவியைப் பெற தெலுங்கு தேசம் கட்சி ஆர்வமாக இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதேபோல், நிதிஷ்குமாரும் முக்கிய இலாகாக்களை கேட்டுப் பெறுவதில் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் வரை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் டெல்லியிலேே தங்கி இருப்பார் என ஐக்கிய ஜனதா தள கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE