பனிப்புயலால் மோசமான வானிலை: உத்தராகண்டில் டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

By வ.வைரப்பெருமாள்

உத்தராகண்டில் டிரக்கிங் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 9 பேர், திடீரென வீசிய பனிப்புயலால் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாகஉயிரிழந்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம், மனேரியில் உள்ள ஹிமாலயன் வியூ ட்ரெக்கிங் ஏஜென்சி, உத்தரகாசியிலிருந்து 35 கி.மீ. நீளமுள்ள மலையேற்றத்துக்கு 22 பேர் கொண்ட மலையேற்றக் குழுவை கடந்த மாதம் 29ம் தேதி அன்று அனுப்பியது.

இந்தக் குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த 18 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரும், உள்ளூரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகள் 3 பேரும் அடங்குவர் என உத்தரகாசி மாவட்ட கலெக்டர் மெஹர்பன் சிங் பிஷ்ட் தெரிவித்தார்.

மலையேற்றத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி

இந்நிலையில் இக்குழுவினர் சென்ற மலைப்பகுதிகளில் மிக மோசமான வானிலை காரணமாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். சஹஸ்ரடல் பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியை வருவாய்த் துறையின் முதன்மைச் செயலர் ராஷ்மி மகேஷ், கர்வால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே மலையேற்றம் சென்று சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்கவும், இறந்தவர்களின் உடல்களை உடனடியாக மாநிலத்துக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா புதன்கிழமை உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா, மீட்பு நடவடிக்கையை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் டேராடூனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா

இது தொடர்பாக அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறுகையில், “மலையேற்ற குழுவினர் இலக்கை அடைந்து மீண்டும் முகாமுக்கு திரும்ப முயன்றபோது கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் பனிப்புயலில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தரகாண்ட் அரசுக்கும், இந்திய மலையேற்ற கூட்டமைப்புக்கும், மத்திய அரசின் உள் துறைக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE