நடப்பாண்டு கணிசமான மனித உயிர்களை பலி கொண்டதில் கவனம் பெற்றிருக்கும் வெப்ப அலையை அச்சுறுத்தலின் மத்தியில், ஒட்டுமொத்தமாக பூமியின் வெப்பநிலையை ஆராயும் செயற்கைக்கோளினை ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.
வடக்கே பல பிராந்தியங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியதில், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலையை அனுபவித்து வருகிறது. இந்த சூழலில் புதிய சவாலாக உருவெடுத்திருக்கும் வெப்ப அலை மற்றும் அதையொட்டிய பல புதிய பிரச்சினைகளை ஆராய இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து பிரத்யேக செயற்கைக்கோளை அடுத்தாண்டு ஏவ உள்ளது.
வெப்ப அலையின் நேரடி பாதிப்பால் மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் பலியானதை பார்த்திருக்கிறோம். ஆனால் புவிப்பரப்பில் அதிகரிக்கும் வெப்பநிலையின் தாக்கத்தால், நீர் மற்றும் உணவு பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ளன. இவற்றை ஆராய உயர் தெளிவுத்திறன் கொண்ட இயற்கை வள மதிப்பீட்டிற்கான தெர்மல் இன்ஃப்ரா-ரெட் இமேஜிங் செயற்கைக்கோள், இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு தேசிய விண்வெளி ஆய்வு மையம் கூட்டு முயற்சியால் உருவாகிறது. பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை, வெப்ப உமிழ்வு, உயிர் இயற்பியல், கதிரியக்க மாறிகள் ஆகியவற்றை புதிய செயற்கைகோள் ஆராயும்.
முன்னதாக பூமியை கண்காணிக்கும் ஆய்வுகளுக்காக பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கும் இந்தியா - பிரான்ஸ் கூட்டணி, பூமியின் அதிகரிக்கும் வெப்பநிலையை ஆராய மற்றுமொருமுறை கரம் கோக்கின்றன. இந்த செயற்கைக்கோள் வெப்பநிலையை கண்காணிப்பதற்கான, இந்தியா - பிரான்ஸ் இணைந்து உருவாக்கிய அகச்சிவப்பு சென்சார்களின் தொகுப்பைப் பயன்படுத்தும். இந்திய வானிலை ஆய்வு மையங்களில் செயல்படும் தானியங்கி சென்சார்கள், வெப்பநிலையை மிகைப்படுத்தி மதிப்பிடுவது தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகளில், புதிய செயற்கைக்கோள் ஆய்வுகள் தெளிவுபடுத்த காத்திருக்கின்றன.
தரைமீதான கருவிகளின் வெப்பநிலை அளவிடலுக்கும், பூமிக்கு மேலே சுமார் 800 கிமீ உயரத்திலிருந்து அதையே செய்வதிலும் உள்ள நவீன கண்காணிப்பு மற்றும் அளவீடுகளிலும் இஸ்ரோ பாய்ச்சல் காட்ட உள்ளது. சரியாக சொல்வதென்றால் பூமியிலிருந்து 761 கிமீ உயரத்தில் இந்த செயற்கைக்கோளின் சுற்றுவட்டப்பாதை அமைந்திருக்கும். சுமார் 5 ஆண்டு காலத்துக்கு செயல்படுவதற்காக இந்த செயற்கைக்கோளின் ஆயுள் தற்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அவசியமெனில் அதனை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.