தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

By வ.வைரப்பெருமாள்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.

18வது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களையும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 233 இடங்களையும், பிற கட்சிகள் 17 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பாஜக கூட்டணி இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும் என அக்கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அவற்றுக்கு மாறாக பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் 240 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளதால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் வகையில் முடிவுகள் வந்துள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் படி, பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது.

உத்தரப் பிரதேசம் (இரவு 7 மணி 32 தொகுதிகள்) மற்றும் மேற்கு வங்கம் (இரவு 11 மணிப்படி 12 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமையாததற்கு காரணமாக பாஜக தலைமை கருதுகிறது.

எனினும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இதன் பிறகு தற்போதைய தேர்தல் வெற்றிக்குப் பின்னர், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி சமன் செய்ய உள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இது இந்திய வரலாற்றில் ஒரு வரலாற்று சாதனையாகும். இதற்காக மக்களிடம் நான் தலைவணங்குகிறேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளை நாங்கள் தொடருவோம் என உறுதியளிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE