வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

By எஸ்.எஸ்.லெனின்

குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வானதன் மூலம், நடப்பு பொதுத்தேர்தல் முடிவுகளில் பாஜக தனது வெற்றிக்கணக்கை உற்சாகமாக தொடங்கியுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பிரம்மாண்டமான பணிகள் நாடுமுழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவைக்கான பொதுத்தேர்தலுடன், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுகளும் ஒருசேர நடைபெற்றன. இவற்றுடன் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்படுகின்றன.

பாஜக - காங்கிரஸ்

அடுத்த ஒரு சில மணி நேரங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவுற்று அவற்றுக்கான அறிவிப்புகள் தெரிய வர உள்ளன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முடிவுகள் வெளியாகும்போதே முன்னிலை நிலவரங்களில் திட்டவட்ட போக்கு வெளிப்படும். ஆனால் இன்று காலை வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே பாஜக தனது வெற்றிக்கணக்கை, குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது மற்றும் இதர வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அப்போதே அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த தேர்வு நடைமுறைகள் தொடர்பான சர்ச்சை நீடித்து வந்த நிலையில், நேற்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “போட்டியின்றி ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படுவதில், போட்டி வேட்பாளர்கள் கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை வாபஸ் பெறும்போது மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்” என்று விளக்கமளித்தார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

’போட்டியின்றி வெற்றிபெறுவதை தட்க்கும் எந்தவொரு விதியும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்காது’ என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பினையும் ராஜீவ் குமார் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் சூரத் தொகுதியின் பாஜக வெற்றி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது. மேலும் இன்று காலை வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னரே, சூரத்தை முன்வைத்து தங்களது வெற்றிக்கணக்கை பாஜக கொண்டாட்டமாக ஆரம்பித்தது. இவ்வாறாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகும் முன்னரே, ஒரு தொகுதியில் திட்டவட்ட வெற்றி அறிவிப்புடன் பாஜக பாய்ச்சல் எடுத்துள்ளது. ஆனால் அக்கட்சியின் இந்த போக்கு தொடருமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெளிவாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE