மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் தங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக, மேற்கு வங்க பாஜக வேட்பாளர்கள் இருவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிகழ்வில் பங்கேற்பதிலிருந்து தங்களைத் தடுக்கும் வகையில், காவல் துறையினர் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதாகக் கூறி, அம்மாநில பாஜக வேட்பாளர்களான பிரனாத் துடு, ரேகா பத்ரா மற்றும் சில பாஜகவினர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.
பிரனாத் துடு, ஜார்கிராம் தொகுதியிலும், ரேகா பத்ரா பாசிர்ஹாட் தொகுதியிலும் பாஜக வேட்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தாக்கல் செய்த மனு, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அம்ரிதா சின்ஹா தலைமையிலான விடுமுறைக் கால அமர்வில் இன்றே விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், சுதந்திரமாக பங்கேற்கும் வகையில் தங்கள் மீதான வழக்குகளுக்கு பாஜக வேட்பாளர்கள் தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக தமலுக்கைச் சேர்ந்த சில பாஜக நிர்வாகிகள், கட்சியின் வாக்கு எண்ணும் முகவர் எனக் கூறிக்கொண்டு, தங்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாகக் கூறி, மனு தாக்கல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை நாடினர். இந்த மனுக்கள் அனைத்தும் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!
5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!
மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!