மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதால், அவை கள நிலவரத்துடன் ஒத்துப்போகவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. இந்த வாக்கு கணிப்புகள் பொய்யானவை, இவற்றில் உண்மை இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைவிட, பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என வாக்கு கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு திரிணமூல் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
"மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்பட்டதால் அவை கள யதார்த்தத்துடன் ஒத்துப்போகவில்லை.
கடந்த 2016, 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் உண்மையாகவில்லை. எனது பேரணிகளில் மக்கள் அளித்த பதில், கருத்துக் கணிப்புகளை உறுதிப்படுத்தவில்லை.
முஸ்லிம்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டைப் பறிக்கிறார்கள் என பொய்யான தகவலை பாஜக பரப்பியதால், முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவுக்கு உதவிபுரிந்ததாக நான் நினைக்கிறேன்.
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். பிராந்திய கட்சிகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்படும்.” என்றார்.
இதைத் தொடர்ந்து, 'மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் மேற்கு வங்கத்தில் சுமூகமான உறவு இல்லாத நிலையில் அது, புதிய அரசில் கைகோர்ப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்குமா?’ என மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “மார்க்சிஸ்ட் தலையிடாத வரை அகில இந்திய அளவில் எந்த இடையூறும் இருக்காது என நினைக்கிறேன். ஒவ்வொரு பிராந்தியக் கட்சிக்கும் தனி மரியாதை உண்டு. எல்லோரிடமும் பேசிவிட்டு, அழைத்தால் நாங்கள் செல்வோம். மற்ற பிராந்திய கட்சிகளையும் உடன் அழைத்துச் செல்வோம். ஆனால் அதற்கு முன்பு தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும்” என்றார்.