பெண் யானைக்கு 4வது நாளாக தொடரும் சிகிச்சை... உடல்நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை!

By கே.காமராஜ்

மருதமலை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு 4வது நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இதனால் விரைவில் யானை உடல்நலன் பெற்று வனப்பகுதிக்கு திரும்பும் என வனத்துறை கால்நடை மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இங்கு ஏராளமான வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள், மான்கள், கரடிகள் ஆகியவை குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையான ஒன்று. மேலும் வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறும் இந்த வனவிலங்குகள், அவ்வப்போது தனியாகவும், கூட்டமாகவும் குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றித் திரிகின்றன.

தாய் யானையின் அருகில் இரவில் வந்து சென்ற குட்டியானை கூட்டம்

அந்த வகையில் கடந்த 30-ம் தேதி கோவை மருதமலை அடிவார பகுதியில் யானை ஒன்று தொடர்ந்து பிளிறிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, உடல் நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் யானை ஒன்று படுத்து கிடப்பதும், அதன் அருகிலேயே 4 மாத ஆண் யானைக் குட்டி ஒன்றும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை கால்நடை மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 4 நாட்களாக யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிரேன் முலம் நிற்கும் யானை, தானாக உணவு எடுத்து வருவதாக வனத்துறை தகவல்

நேற்று முன்தினம் பெண் யானையை, கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்திய வனத்துறையினர், சிகிச்சைகளை தொடர்ந்து வந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு சத்து மாத்திரைகளை, புலி, வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து, அரிசி சாப்பாட்டில் வைத்து வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் குட்டியானை அங்கிருந்து சென்ற நிலையில், அந்த குட்டி யானையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று இரவு குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகள் பெண் யானை நின்றிருக்கும் இடத்திற்கு வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த யானை தாமாக உணவு எடுக்க துவங்கி இருப்பதாகவும், கிரேன் உதவியில்லாமல் தானாக நின்று, நடந்து செல்லும் வரை இந்த சிகிச்சைகள் தொடரும் எனவும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் குட்டி யானை வனப்பகுதியில் இருந்து மீண்டும் தாய் யானையிடம் திரும்பி வரும் பட்சத்தில் இரண்டு யானைகளையும் சேர்த்து அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கும் வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE