சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

By வ.வைரப்பெருமாள்

சாவர்க்கரை அவதூறாகப் பேசியதாக குற்றம்சாட்டி அவரது பேரன் தொடுத்த வழக்கில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி நேரில் ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி சாவர்க்கர் உள்ளிட்ட இந்துத்துவ சித்தாந்தவாதிகளை அவதூறாக பேசியதாக கூறி, சாவர்க்கரின் பேரன் சாத்யகி சாவர்க்கர் புனே காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பான அறிக்கையை புனே போலீஸார் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அங்குள்ள நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

சாவர்க்கர்

அந்த அறிக்கையில் ராகுல் காந்தி, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (முதல் வகுப்பு) அக்சி ஜெயின் பிறப்பித்தார்.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ராகுல் காந்தி சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. எனினும், நேற்றைய விசாரணை தொடர்பான விரிவான உத்தரவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி உத்தரவு

சத்யகி சாவர்க்கரின் வழக்கறிஞர் சங்க்ராம் கோலாட்கர் கூறுகையில், "அந்த தேதியில் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

சத்யகி சாவர்க்கரின் புகாரின்படி, "ராகுல் காந்தி தனது உரையில் "வி.டி.சாவர்க்கர் ஒரு புத்தகத்தில் தானும் அவரது நண்பர்களும் ஒருமுறை முஸ்லிம் ஒருவரை தாக்கியதாகவும், அதனால் தான் மகிழ்ச்சியுற்றதாகவும் எழுதியுள்ளார் என பேசியதாகவும், ஆனால் ராகுல் காந்தி குறிப்பிட்டதுபோல் சாவர்க்கர் எங்கும் அப்படி எதுவும் எழுதவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE