ஒடிசாவின் பூரியில் உள்ள பகவான் ஜெகநாதரின் சந்தன் ஜாத்ரா திருவிழாவில் நேற்று இரவு பட்டாசு வெடித்தபோது, 15 பேர் படுகாயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்திபெற்ற ஜெகநாதர் கோயிலில் சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு திருவிழா நிகழ்வுகளை காண, நரேந்திர புஷ்கரணி கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது, திருவிழாவில் ஒரு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக எரிந்த பட்டாசு துண்டு ஒன்று, பட்டாசு குவியலில் விழுந்தது.
இதில், அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அப்போது அந்த பட்டாசுகள் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் விழுந்தன. இதில் பொதுமக்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பட்டாசு வெடித்து சிதறியபோது சிலர் தப்பிப்பதற்காக அங்கிருந்த நீர்நிலைகளில் குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர், மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், வருத்தம் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிகிச்சைக்கான செலவு முதலமைச்சரின் நிவாரண நிதியால் இருந்து அளிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.