காரை அஜாக்கிரதையாக ஓட்டியதாக பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப்பில் 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸைக் கொண்டவர் டி.டி.எஃப்.வாசன். 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஏற்கெனவே இவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டி.டி.எஃப்.வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டி.டி.எஃப். வாசனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர்.
பைக் ரேஸ் பிரியரான. டி.டி.எஃப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார். அதுவே மதுரையில் அவர் மீது வழக்காக பதிவாகியுள்ளது.
மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின். கீழ் அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தததுடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் டி.டி.எஃப்.வாசன் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அதை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ஐ.டி மூலம் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி ர் அளித்த புகாரின் கீழ் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.