1,200 பேரின் போன்கள் ஒட்டுக்கேட்பு... கைதான தெலங்கானா போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்

By எஸ்.எஸ்.லெனின்

எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பத்திரிக்கையாளார்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் என தெலங்கானாவில் சுமார் 1,200 பேர் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு நடவடிக்கைக்கு ஆளானதாக, கைது செய்யப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் நடந்ததுமே, முந்தைய கே.சந்திரசேகர் ராவ் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தை உலுக்கிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். இதன்படி, மத்திய அரசின் உரிய அனுமதியை பெறாது இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் மற்றும் மென்பொருட்களைக் கொண்டு அரசியல் எதிரிகள் ஒட்டுக்கேட்புக்கு ஆளானது தெரிய வந்துள்ளது.

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் உடன் டி.பிரபாகர் ராவ்

அப்போதைய எஸ்ஐபி தலைவர் பிரபாகர் ராவ் மேற்பார்வையில் எஸ்ஐபியில் சிறப்பு நடவடிக்கை குழுவுக்கு தலைமை தாங்கிய டி.பிரனீத் ராவ், விசாரணை அதிகாரிகளிடம் தற்போது அளித்து வரும் வாக்குமூலத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் துணை போலீஸ் கமிஷனர் ராதா கிஷன் ராவ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் என்.புஜங்கா ராவ் மற்றும் எம். திருப்பத்தண்ணா ஆகியோரின் ஒப்புதல் வாக்குமூலங்களை தொடர்ந்து ஏஎஸ்பி பிரனீத் ராவின் வாக்குமூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

17 கணினிகள் மற்றும் பிரத்யேக சர்வர்கள் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், 56 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 2023 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை, எதிர்க்கட்சி வேட்பாளர்களின் தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டதுடன், அதன்மூலம் அவர்களுக்கு நிதி வழங்கியவர்கள் மற்றும் உதவியவர்களை குறிவைத்து கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் கமிஷனுக்கு சந்தேகம் வராத வகையில், ஹவாலா பணமாக காட்டப்பட்டது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி - முன்னாள் முதல்வர் கேசிஆர்

எதிர்க்கட்சியினர், அவர்களது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மட்டுமன்றி பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் ஆகியோருடன், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் பிரனீத் ராவ் தெரிவித்துள்ளார். இவற்றில் பிரதானமாக அப்போதைய காங்கிரஸ் தலைவரும் தற்போதைய தெலங்கானா முதல்வருமான ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் போன்களை ஒட்டுக்கேட்க தனி அலுவலகமே செயல்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் உறுதியானதுமே, தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் நிறுத்தப்பட்டதாகவும், ஒட்டுக்கேட்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் பதிவுகள் சிதைக்கப்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சிதைக்கப்பட்ட சிடிக்கள், ஹார்டுடிஸ்குகள் போன்றவை மூசி ஆற்றில் வீசப்பட்டிருக்கின்றன. இதர கருவிகளை எரித்தும், சிதைத்தும் நாசம் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் நித்தம் வெளியாகும் தகவல்கள் முந்தைய பிஆர்எஸ் ஆட்சியின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செல்வாக்குடன் வலம் வந்த அதிகாரிகளுக்கு எதிராக திரும்பி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE