பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

By கவிதா குமார்

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் (எஸ்ஐடி) விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது பிரஜ்வல் படுத்திருந்த அறையில் இருந்த கட்டில், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கைப்பற்றியுள்னர்.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகவும், வீடியோவில் படம்பிடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரஜ்வல் ரேவண்ணா

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் பாலியல் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக எஸ்ஐடி கையில் சிக்காமல் போக்குக்காட்டி வரும் பிரஜ்வல் ரேவண்ணா, மே 31-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கு வேகம் பெற்றுள்ளது.

சோதனை நடைபெற்ற பிரஜ்வலின் வீடு

இந்த நிலையில், ஹாசன் நகர், ஆர்.சி சாலையில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி மறும் எஃப்எஸ்எல் குழுக்கள் நேற்று முதல் இன்று அதிகாலை 4 மணி வரை 10 மணி நேரமாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது பிரஜ்வல் ரேவண்ணா படுத்திருந்த அறையில் இருந்த கட்டில், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை எஸ்ஐடி கைப்பற்றியுள்ளது. இந்த படுக்கை உறைகளில் இருக்கும் டிஎன்ஏ ஆதாரங்களை எஃப்எஸ்எல் குழு சேகரித்து சரிபார்க்கப் போகிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நாடு திரும்ப பிரஜ்வல் ரேவண்ணா, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். ஜெர்மனியின் முனிச்சில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக டிக்கெட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா

மே 31-ம் தேதி பெங்களூரு சென்றடையும் லுஃப்தான்சா விமானத்தில் அவர் முன்பதிவு செய்துள்ளதால், பெங்களூரு விமான நிலையத்தில் அவரை கைது செய்து விசாரணை நடத்த எஸ்ஐடி தயாராகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE