டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

By வ.வைரப்பெருமாள்

டெல்லி விமான நிலையத்தில் வாராணசி நோக்கிச் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் ‘6E2211’ என்ற இண்டிகோ விமானம் வாராணசி நோக்கி, புறப்படதயாராகி இருந்தது. அப்போது, விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று காலை 5:40 மணியளவில் ஐஜிஐ விமான நிலையத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது.

விமானத்தின் கழிப்பறைக்குள் ஒரு காகிதத்தில் '30 நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்' என எழுதப்பட்டிருந்ததாக விமானிக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானம் தனிமைப்படுத்தப்படும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பிரதான வழி, அவசர வழி உள்ளிட்டவற்றின் வழியாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த விமானத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் எவ்வித பொருளும் கண்டறியப்படவில்லை. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.

வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி விமான நிலையத்தில் கடந்த 15ம் தேதி வதோதரா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்திலும் இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அது போலி என்பது தெரியவந்தது.

கடந்த ஒரு மாதமாகவே டெல்லி, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் பள்ளிகள், மருத்துவமனை, விமான நிலையம், ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது விமானங்களும் இணைந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE