பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் பாஜகவின் தேர்தல் நாடகமா?... பஞ்சாப் முன்னாள் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

By காமதேனு

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலை பாஜகவின் தேர்தல் ஸ்டண்ட் என கூறியதற்காக பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னிக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில், இந்திய விமானப்படை கான்வாய் மீது பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், இந்திய வீரர்களில் ஒருவர் பலியானார், 4 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐயம் எழுப்பிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, 2019 புல்வாமா தாக்குதலோடு ஒப்பிட்டு பூஞ்ச் பயங்கரவாதிகள் தாக்குதலை, பாஜகவின் தேர்தல் ஸ்டண்ட் என வர்ணித்து இருந்தார்.

பூஞ்ச் தாக்குதல் சம்பவம்

2019 புல்வாமா பயங்கரவாதிகள் தாக்குதலை, தேர்தல் நோக்கத்தோடு பாஜக தலைமை பயன்படுத்திக்கொண்டதாக, பாஜகவை சேர்ந்தவரும், முன்னாள் ஆளுநருமான சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியிருந்ததை, சரண்ஜீத் சிங் மேற்கோள் காட்டியிருந்தார்.

ஆனால் ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்ததாக புகார்கள் எழுந்தன. காங்கிரஸ் தலைமையின் கருத்தும் அவருக்கு எதிராக மாறியது. இதனிடையே சரண்ஜீத் சிங்கின் சர்ச்சை கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரானது.

சரண்ஜீத் சிங் சன்னி பஞ்சாப்பின் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடியின் ஃபெரோஸ்பூர் பயணத்திற்கான பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை மீறியதாக பாஜகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். தற்போது ஜலந்தர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சரண்ஜீத் சிங்கிடம், அவரது பூஞ்ச் தாக்குதல் தொடர்பான சர்ச்சை கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அவர் அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை. இதனையடுத்து சரண்ஜீத் சிங்குக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்

”பிற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது, அவர்களின் கொள்கைகள், திட்டங்கள், பொது நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள் அல்லது திரிபுகளின் அடிப்படையில் மற்ற கட்சிகள் அல்லது அவர்களின் நிர்வாகிகளை விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு உரிய இம்மாதிரியான நடவடிக்கைகள் மீண்டும் கூடாது” என்றும் தேர்தல் ஆணையம் சரண்ஜீத் சன்னிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE