வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

By கவிதா குமார்

வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ( மே 22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (மே 24) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE