சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு கேடு... ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் டெல்லி துணைநிலை ஆளுநர் காட்டம்

By எஸ்.சுமன்

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா குரல் கொடுத்திருக்கிறார்.

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி-யான ஸ்வாதி மலிவால் மீதான தாக்குதல் தொடர்பாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கள்ளமவுனம், பெண்கள் பாதுகாப்பு குறித்தான அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இன்று சாடியுள்ளார். இதற்கு ஆம் ஆத்மி தனது பதிலடியாக, ’பாஜக உத்தரவின் பேரில் மலிவால் செயல்படுகிறார்’ என்று தாக்கியுள்ளது.

ஸ்வாதி மாலிவால்

மே 13 அன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், தான் தாக்கப்பட்டதாக மலிவால் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து, அவரது உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியை எதிர்க்கட்சிகள் சாடி வருவதன் மத்தியில், டெல்லி துணைநிலை ஆளுநரான வி.கே.சக்சேனாவும் சேர்ந்திருக்கிறார்.

மலிவால் பிரச்சினையில் ஆம் ஆத்மியின் தடுமாற்றம் குறித்து சக்சேனா விமர்சித்துள்ளார். "ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ஸ்வாதி மலிவால் முதல்வரின் இல்லத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில், கடந்த சில நாட்களாக வெளிவரும் ஊடக செய்திகளால் நான் மிகவும் வேதனையடைந்தேன்” என்ற சக்சேனா, மலிவால் தன்னிடம் முறையிட்டது குறித்து விவரித்துள்ளார்.

"ஸ்வாதி மலிவால் என்னை தொடர்புகொண்டு தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தை விவரித்தார். சொந்த கட்சியின் சகாக்களால் தான் பயமுறுத்தப்படுவதையும் விவரித்தார். ஆதாரங்களைத் திருடுவது மற்றும் தனக்கு எதிரான அழுத்தங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்" என்று விவரித்திருக்கும் சக்சேனா, கையோடு அர்விந்த் கேஜ்ரிவாலையும் தாக்கியுள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் - விகே சக்சேனா

"குறைந்த பட்சம் தனது முதல்வர் பதவியின் மதிப்புக்காக இந்த விவகாரத்தில் பொறுப்புடன் அவர் நடந்துகொள்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரது கள்ளமவுனம் பெண்களின் பாதுகாப்பு குறித்த அவரது நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது" என்று சாடியுள்ளார்.

மேலும் "இதுபோன்ற வெட்கக்கேடான சம்பவங்கள் உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கிறது" என்றும் துணைநிலை ஆளுநர் சக்சேனா விமர்சித்துள்ளார். இவருக்கு பதிலடி தந்திருக்கும் ஆம் ஆத்மி, ’ஒவ்வொரு நாளும் பாஜக ஒரு புதிய சதியை வெளியிடுகிறது. தேர்தல் வரை பாஜக எங்களுக்கு எதிராக புதிய யுக்திகளை கையாளவும் செய்கிறது. தோல்வியை கண்டு அஞ்சும் பாஜக, தங்கள் வெற்றிக்காக மலிவால் விவகாரம் உட்பட எதையும் மோசமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE