மக்களவைத் தேர்தலின் முடிவில் ’பாஜக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காது போனால் அக்கட்சி என்ன செய்யும், அதன் பிளான் பி என்ன?’ என்பது குறித்து அமித் ஷா பதிலளித்துள்ளார்.
பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதா கூடாதா என்பதுதான் நடப்பு மக்களவைத் தேர்தலின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. இதனை முன்வைத்தே ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் மோதலும் நிலவுகிறது. கூட்டணியாக 400 இடங்கள், பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் என்ற வெற்றிக் கணக்குடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது பாஜகவின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக திரண்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, மோடி தலைமையிலான ஆட்சி மூன்றாம் முறையாக அரியணை ஏறுவதை தடுப்பது என்ற ஒரே நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான 272 என்ற மேஜிக் நம்பர் சாத்தியமாகுமா என்பது பொதுவெளியில் பெரும் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது. பாஜக எதிர்பார்க்கும் பெரும்பான்மைக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கணிப்பாக நீடிக்கிறது. ஒருவேளை அப்படி ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைக்காது போனால், அக்கட்சி என்ன செய்யும், அதன் தலைமையிடம் என்ன திட்டம் இருக்கிறது போன்றவை முக்கிய கேள்விகளாக எழுகின்றன.
இந்த சூழலில், இன்றைய தினம் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வசம் இந்த கேள்விகள் இன்று முன்வைக்கப்பட்டன. இதன் பொருட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பதிலில், ‘பாஜகவுக்கு பெரும்பான்மை கிட்டாது போகுமெனில் அதன் பிளான் பி என்ன?’ என்பது முக்கிய கேள்வியாக இடம்பெற்றிருந்தது. நடப்பு அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த கேள்விக்கு அமித் ஷா அளித்த பதிலில், ’அப்படி பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது போவதற்கான வாய்ப்பே இல்லையென்றும், பிளான் பி என்பதற்கான அவசியமும் இல்லை’ எனவும் பதிலளித்துள்ளார்.
”பாஜக பெரும்பான்மை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் நான் காணவில்லை. 60 கோடி பலம் வாய்ந்த பயனாளிகள் கொண்ட ’ராணுவம்’ பிரதமர் மோடியுடன் நிற்கிறது. அவர்களுக்கு ஜாதியோ, வயதோ கிடையாது. பாஜகவின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளால் பயனடைந்த இவர்கள், மோடி தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பளிப்பதோடு 400 இடங்களுக்கான வெற்றியையும் பெற்றுத்தருவார்கள்.
எங்களது ’பிளான் ஏ’ வெற்றிபெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே ’பிளான் பி’ உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு அவசியமே இன்றி பிரதமர் மோடி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அமித் ஷா திடமுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!