தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு... மேலும் குறையுமா?!

By காமதேனு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ள போதும், 54,000 ரூபாயிலேயே நீடிப்பதால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சற்று குறைந்த தங்கத்தின் விலை, மீண்டும் கடந்த அட்சய திருதியை நாளன்று அதிகப்படியாக உயர்ந்து 54,000 ரூபாயை கடந்தது. அதைத் தொடர்ந்து சிறிது குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை சரிவு

அந்த வகையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 70 ரூபாய் உயர்ந்து 6,795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தகம் துவங்கியது முதலே, தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்தது. இதன் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் விலை குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி நகைகள்

தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்துள்ள போதும், 54,000 ரூபாய்க்கும் குறையாமல் இருப்பது பொது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 92 ரூபாய் 50 பைசாவிற்கு நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 92,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE