என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

By காமதேனு

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. அவர் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று யூடியூப்பர் பெலிக்ஸ் ஜெரால்ட்டின் மனைவி ஜேன் ஆஸ்டின் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

காவல் துறையினரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சியிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் சில தினங்கள் முன் கைது செய்தனர்.

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு

அதற்கு முன்னதாக, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்தவாரமே கைது செய்யப்பட்டுவிட்டார். எனவே அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி “பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரின் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது” என்று கூறி பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜேன் ஆஸ்டின், தலைமைச்செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில், "சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த எனது கணவர் ஜெரால்டு நெறியாளர் என்பதற்காக வழக்குகளில் உடன் வழக்காளியாக சேர்க்கப்படுகிறார். அந்த பேட்டியை அவர் உள்நோக்கத்துடன் பதிவு செய்யவில்லை. இந்த நேர்காணலைப் பதிவு செய்ததற்காக கடந்த மே.15-ம் தேதி நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். அந்த காட்சியும் நீ்க்கப்பட்டுவிட்டது. கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.

பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் ஆஸ்டின்

கடந்த மே 14-ம் தேதி நடத்தப்பட் ட சோதனையில், வழக்குடன் தொடர்பில்லாத எங்கள் சொத்து ஆவணங்கள், புகைப்படக்கருவிகள், கணிப்பொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், எங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகை செய்ய வேண்டும்.” என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE