முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

By ஆர். ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி முடிதிருத்தும் கடையில் திடீர் என நுழைந்து தன் தாடியை வெட்டி செய்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் சமயங்களில் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள் அதிரடியாக ஏதாவது செய்து பொதுமக்கள் கவனத்தை கவர்வது வழக்கம். அந்தவகையில், காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, கடந்த மே 3ல் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து சென்றவர், நேற்று முதன்முறையாக பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரக் கூட்டம் மஹராஜ்கன்சில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், ரேபரேலி நகரின் பிரிஜேந்தர் நகர் வழியாக ராகுல் தனது குடியிருப்பிற்கு திரும்பினார். அப்போது, வழியில் வாகனத்தை நிறுத்தி ராகுல் செய்த அதிரடி செயல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையோர சலூன் கடையில் தாடியை திருத்தம் செய்து கொண்ட ராகுல் காந்தி

அங்குள்ள பைஸ்வாரா கல்லூரியின் முன், ’மிதுன் சலூன்’ எனும் பெயரில் ஒரு முடிதிருத்தும் கடை உள்ளது. இதனுள் திடீர் என நுழைந்தவரை கண்டு உள்ளே இருந்த பணியாளர் வியப்படைந்தார். நேராக முடிதிருத்துவதற்கான நாற்காலியில் அமர்ந்த ராகுல், தம் தாடியை வெட்டி சரிசெய்யும்படி கூறினார். அந்த நாற்காலியை ராகுலின் பாதுகாப்பு படையினர் சூழ்ந்தபடி நின்றனர். பிறகு தம் தாடியை வெட்டி சரிசெய்துகொண்ட ராகுலின் முகத்தில் அனைவரையும் போல் நீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முகத்தின் நீரை தம் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் ராகுல். இதற்குமுன் அவர், முடிதிருத்துபவருக்கு கொடுத்த கட்டணம் ரூ.500.

சலூன் கடை தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ரேபரேலியில் ராகுல் நடத்திய முதல் கூட்டத்தில் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தினர் ராகுலிடம் கேள்விகளை எழுப்பிய நிலையில், திடீரென கூட்டத்திலிருந்த ஒரு பெண், ‘எப்போது திருமணம்?’ என்று கேட்டார்.

எப்பவும் போல் ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்திய ராகுல், ‘இனி விரைவில் முடிக்க வேண்டியது தான்’ எனப் பதிலளித்தார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

கடந்த 2004ல் முதன்முறையாக அரசியலில் குதித்து அமேதி தொகுதியின் மக்களவை தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். அப்போது முதல் 2019 வரை எம்பியாகவும் தொடர்ந்தார். 2019 இல் பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அதே வருடம் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், அதன் பின்னர் எம்பி-யானார். இந்தமுறை தேர்தலில் வயநாடு சேர்த்து, ரேபரேலியிலும் போட்டியிடுகிறார் ராகுல். இங்கு அவரது தாய் சோனியா காந்தி, 2004 முதல் எம்பி-யாக இருந்து, இந்த ஆண்டு மாநிலங்களவைக்கு மாறி விட்டார். ரேபரேலியில், ராகுல் நேற்று நடத்தியது உபி-யில் அவரது 2வது பிரச்சாரக் கூட்டம் ஆகும். இதற்கு முன் அவர் மே 9ல் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE