ஜாமீனுக்கு வாய்ப்பே இல்லை... கைவிரித்த நீதிமன்றங்கள்; அதிர்ச்சியில் ஹேமந்த் சோரன்!

By காமதேனு

ஜாமீன் வழங்கக் கோரி ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் முறைகேடாக நிலங்களை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 266 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஜனவரி 31ம் தேதி அவரை கைது செய்தது. இதையடுத்து முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இதனிடையே இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் அவர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்கள் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றம்

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் போல, தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது இந்த வழக்கை வருகிற மே 20ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஹேமந்த் சோரன்

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் விரைவான நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும், வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் வருகிற மே 17ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என உத்தரவிட்டனர்.

இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, ஹேமந்த் சோரன் தரப்பில் ராஞ்சியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த மே 4ம் தேதி இருதரப்பு விசாரணைகள் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE