சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு போட்டது இதனால்தான்... தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!

By காமதேனு

கஞ்சா கடத்தல்காரர்களை கூடவே வைத்திருப்பவர்கள் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கரை கைது செய்கிறார்கள் என திமுக அரசு மீது தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.

சவுக்கு சங்கர்

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தை ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசினார்.

அவர்,"இது சொல்லாட்சி இல்லை செயலாட்சி என்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டு ஏழு நாட்களாகியும் இன்னும் அதில் துப்பு துலங்கவில்லை. அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சவுக்கு சங்கர் விஷயத்தில் இரவோடு இரவாக கைது நடக்கிறது. யூடியூப் ஆசிரியரை டெல்லியில் போய் கைது செய்கிறார்கள்.

தமிழிசை சௌந்தராஜன்

சவுக்கு சங்கரின் வார்த்தைகள் தப்பாக இருக்கலாம். யார் பெண்களைப் பற்றி தவறாக சொன்னாலும் அது கண்டிக்கத்தக்கது. ஆனால் எந்த ஒரு விவகாரத்தையும் சட்ட ரீதியாகத்தான் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் அப்படி அணுகவில்லை. வன்முறையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு போடுகிறார்கள்

தன்னைப் பற்றி பேசியதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கஞ்சா வழக்கு போடப்பட்டிருக்கிறது. கஞ்சா வைத்திருந்தவர்களை கைது செய்யும் நீங்கள் கஞ்சா கடத்தல்காரர்களை கூடவே வைத்திருந்திருந்தீர்களே. கஞ்சா வைத்திருப்பது தவறு. ஆனால் எப்படி வைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது.

கஞ்சா கடத்தல்காரரை கூடவே வைத்துக்கொண்டு நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள். திரைத் துறையையும் நடத்துகிறீர்கள். சாதிக்கலாம் என்ற நினைத்திருக்கும்போது சாதிக்கைத் தான் வைத்திருக்கிறீர்கள். திரைத்துறையில் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்கிறவர்களாகவும் கஞ்சா கடத்தல்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பி.கே (பிரசாந்த் கிஷோர்) வரப்போகிறார் என்கிறார்கள். ஆக ஸ்டாலின் திமுகவை நம்பவில்லை பி.கே.வைத்தான் நம்புகிறார். எந்த சாதனையையும் திமுக அரசு செய்யவில்லை. வெறுமனே பெயர் வைத்துக்கொண்டு தான் போகிறார்கள். ஆனால் அவர்கள் 2026 தேர்தலில் மக்களை நேரடியாக சந்திக்க முடியாது. படுதோல்வி அடைவார்கள்.

மாவட்டத் தலைவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கவில்லை வேங்கை வயலில் மலம் கலந்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கஞ்சா கடத்தியவர்களை கூடவே வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு சமூக நீதி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. வேங்கை வயலில் மக்கள் குடிக்கும் தண்ணீரை அசுத்தப்படுத்திவிட்டு தாங்கள் சுத்தமாக இருப்பது போல இவர்கள் பேசுகிறார்கள்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE