அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்... முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

By காமதேனு

பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் தமிழ்நாட்டில் 91.55 சதவீத மாணவர்களும், புதுச்சேரியில் 91.28% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளங்களுக்கு சென்றும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!’ என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதேபோல் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE