கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தனது அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டு இருந்த ஆகாஷ் ஆனந்தை அப்பொறுப்புகளில் இருந்து நீக்கி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, சமீபத்தில் தனது அரசியல் வாரிசாக கட்சியின் மூத்த தலைவரும், மாயாவதியின் சகோதரருமான ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை அறிவித்திருந்தார். தனக்கு பிறகு கட்சியை அவர் வழிநடத்துவார் என்ற நோக்கில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஆகாஷ் ஆனந்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஆகாஷ் ஆனந்த் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆகாஷ் ஆனந்துக்கு அனுபவம் போதாது என்பதால் அவரை தற்காலிகமாக அந்த பொறுப்பில் இருந்து விலக்கி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ’பகுஜன் சமாஜ் கட்சி அம்பேத்கரின் சுயமரியாதைக்கான கட்சி. சமூக மாற்றத்திற்காக கன்ஷிராம் மற்றும் நான் எங்களது மொத்த வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறோம். இளம் தலைமுறை அதற்கு வலு சேர்க்க இருக்கிறார்கள். இதை ஒட்டியே சமீபத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் எனது அரசியல் வாரிசாகவும் ஆகாஷ் ஆனந்தை நியமித்திருந்தேன்’
‘ஆனால் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தற்போது இந்த இரண்டு பொறுப்புகளில் இருந்தும் அவரை விடுவித்து இருக்கிறேன். அவருக்கு அரசியல் முதிர்ச்சி கிடைக்கும் வரை இந்த அறிவிப்பு தொடரும். அவரது தந்தை ஆனந்த் குமார் தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வார். கட்சி எந்த விதமான தியாகத்திற்கும் தயங்காது என்பதை இது காட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் ஆகாஷ் ஆனந்த் பிரச்சாரத்தின் போது பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சீதாப்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாநில அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். ”இந்த அரசு புல்டோசர் அரசு. துரோகிகளின் அரசு. ஆட்சியில் இருக்கும் கட்சி இளைஞர்களை வறுமையோடும் வயதானவர்களை அடிமைப்படுத்தும் பயங்கரவாத அரசாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் இத்தகைய அரசை தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்து இருந்தார். இதையடுத்து அவர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!
பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்
பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!
பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!