நாடு முழுவதும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது... பிரதமர் மோடி வாக்களித்தார்!

By காமதேனு

நாடு முழுவதும் மூன்றாம் கட்டத் தேர்தலை ஒட்டி 94 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் இரண்டு கட்டங்களில் இதுவரை 189 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.

இதில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகள்`, கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் அண்ட் டியூ யூனியன் பிரதேசங்களில் 2 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகியவற்றிற்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதேபோல் கோவாவில் உள்ள மொத்தம் 2 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளுக்கும், பிஹாரில் 5 தொகுதிகளுக்கும், அசாமில் 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த ஊரான குஜராத்தில் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.

இதேபோல் கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு இந்த 94 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

ஷிவமோகா மாவட்டத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக அரண்மனை வடிவில் வாக்குப்பதிவு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பணியாளர்கள் அனைவரும் மன்னர் காலத்து பணியாட்கள் போல வேடமணிந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வாக்களித்த பின்னர், வாக்காளர்கள் மன்னர் இருக்கை போன்ற இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE