காரைக்குடி அருகே 3 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம்: மின்சாரம் இல்லாததால் தீப்பந்தம்!

By KU BUREAU

காரைக்குடி: காரைக்குடி அருகே மழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரமின்றி 3 நாட்களாக கிராம மக்கள் தவித்து வருகின்றனர். காரைக்குடி அருகே பெரிய கோட்டை ஊராட்சி பழையவளவு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு கடந்த 24-ம் தேதி பெய்த பலத்த மழையால் ஏராளமான மரங்கள், 4 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

சாய்ந்த மின் கம்பங்களை சரிசெய்யாததால் 3 நாட்களாக மின் விநியோகம் இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இரவில் இருளில் மூழ்கியுள்ளது. இதையடுத்து வீடுகளில் மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி சமாளித்து வருகின்றனர். மின்விசிறி இயங்காததால் குழந்தைகள் இரவில் கொசுக்கடியாலும், புழுக்கத்தாலும் சிரமப்படுகின்றனர்.

பெரியகோட்டை ஊராட்சி பழையவளவு கிராமத்தில் கீழே
விழுந்து கிடக்கும் மின் கம்பங்கள்.

மின் மோட்டார்களை இயக்க முடியாததால் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும் இரவில் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது தீப்பந்தம் ஏந்தி செல்கின்றனர்.

இரவில் தீப்பந்தம் ஏந்திச் செல்லும் பழையவளவு கிராம மக்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 3 நாட்களாக மின் விநியோகமின்றி சிரமப்படுகிறோம். கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாய்ந்த மின் கம்பங்களை கூட அகற்றாமல் பாதையில் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE