பாஜக என்பதற்கு பதட்டப்படுத்தும் பொய்யான கட்சி என்று அர்த்தம்... தேஜஸ்வி யாதவ் புதிய விளக்கம்!

By ஆர். ஷபிமுன்னா

பாஜக என்பதற்கான விரிவாக்கம் பதட்டப்படுத்தும் பொய்யான கட்சி என்பதாகும் என ராஷ்டிரியா ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் சனாதன விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தற்போதைய மக்களவை தேர்தலிலும் பீகாரில் சனாதன தர்மம் சர்ச்சையாகி வருகிறது. இந்த நிலையில் பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சனாதன தர்மம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், சனாதனத்திற்கு ஆபத்து எனப் பிரதமர் நரேந்திரமோடி கூறுவது தவறு என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "பிரதமர் மோடி சனாதன தர்மத்தை சேர்ந்தவர். குடியரசு தலைவரும் சனாதன தர்மத்தவரே. நம் நாட்டின் முப்படை தளபதிகளும் சனாதன தர்மத்தினர்தான். மாநில முதல்வர்கள், அதன் ஆளுநர்கள் என அனைவருமே சனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இதன் பிறகும் சனாதனத்திற்கு ஆபத்து என்று பிரதமர் எப்படி கூறுகிறார்?

தேஜஸ்வி யாதவ்

இதுபோன்றவர்கள் சமூகத்தை பிரித்து ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். எனவே, இவர்களது வலையில் மக்கள் சிக்கி விடக் கூடாது. பாஜக என்பதன் அர்த்தம் 'படுகாவ் ஜுட்டா பார்ட்டி (பதட்டப்படுத்தும் பொய்யானக் கட்சி) என்பதாகும்,’ என அவர் பேசியுள்ளார்.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான விஜய் சவுத்ரி, தேஜஸ்வியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். " தேஜஸ்வியின் கருத்து மிகவும் அவதூறானது. இதுபோல், அவதூறாகப் பேசுவது எவ்வளவு தவறோ அதைவிட தவறு ஊடகங்கள் வழியாகப் பிரச்சாரம் செய்வது. இந்த பேச்சுக்கள் தற்போது தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE