உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் ராகுல் காந்தியை போட்டியிட வைத்ததில் பெருமை கொள்கிறது காங்கிரஸ். ஆனால், காந்தி குடும்பத்தின் மற்றொரு வாரிசான பிரியங்கா வத்ராவிற்கு வாய்ப்பளிக்காதது சர்ச்சையை கிளம்பி உள்ளது. அமேதி அல்லது ரேபரேலியில் பிரியங்காவை போட்டியிட வைத்திருக்கலாம் எனவும், அவரது வெற்றி வாய்ப்பு, ராகுலை விட அதிகமாக இருந்திருக்கும் என்றும் உ.பி காங்கிரஸார் புலம்புகின்றனர்.
அமேதியில் கிஷோரி லால் அறிவிக்கப்பட்டதில் உ.பி காங்கிரஸாரிடம் உற்சாகம் இருப்பதாகத் தெரியவில்லை. உ.பியின் காங்கிரஸ் அலுவலகங்கள் வழக்கத்திற்கு மாறாக சோர்ந்து காணப்படுகின்றன. இன்று முடிந்த வேட்புமனு தாக்கலுக்கு பின் இந்தநிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்காவை ரேபரேலி அல்லது அமேதியில் போட்டியிட வைத்திருந்தால் காட்சிகள் வேறாக இருந்திருக்கும். இதன்மூலம், தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் இந்த தேர்தலில் இழந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், அரசியலுக்கு நேரடியாக வருவதற்கு முன், பிரியங்கா மீது பெரிய எதிர்பார்ப்புகள் நிலவின. அப்போது, அரசியலுக்கு வராதவர், 2019 மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பாக காங்கிரஸில் இணைந்தார். இதன் பிறகும் தேர்தலில் போட்டியிடாதவரிடம் 2022 இல் உ.பியின் தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. இதன் 403 தொகுதிகளில் காங்கிரஸுக்கு முன்பைவிட மிகக் குறைவாக வெறும் 2 தொகுதிகள் கிடைத்தன. இது, காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள காங்கிரஸ் மறுத்ததன் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
அமேதியில் காங்கிரஸுக்கு முன்னதாகவே பாஜக தனது வேட்பாளராக மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை அறிவித்திருந்தது. இவர் 2019 இல் ராகுலை விட சுமார் 55,000 வாக்குகள் அதிகமாக வாக்குகள் பெற்றவர். இதுபோல், சற்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வேட்பாளர் மீது எப்பவுமே தொகுதிவாசிகளின் அனுதாபம் இருப்பது உண்டு. அதேசமயம், தற்போதைய எம்.பிக்கு எதிரான வாக்குகள் அந்த தொகுதியில் அதிகரிப்பது உண்டு. இச்சூழலில், ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிட்டிருக்கலாம் என்பது உ.பி காங்கிரஸாரின் கருத்தாக உள்ளது.
இது குறித்து ‘காமதேனு’ இணையத்திடம் உ.பி காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘குறைந்த வாக்கு வித்தியாசம் என்றாலும் தாம் தோல்வியுற்றமைக்காக ராகுல் அமேதியை கைவிட்டிருக்கக் கூடாது. கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்த காந்தி குடும்பத்தின் அபிமான தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுக்க வேண்டும். அதேசமயம், தனது தாய் சோனியா காந்திக்கு பதிலாக மகள் பிரியங்கா வத்ராவை ரேபரேலியில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கலாம். இதன்மூலம், உ.பி காங்கிரஸின் முக்கிய முகமாக பிரியங்கா முன்னேறி இருப்பார். இந்த சகோதரிக்கு பதிலாக ராகுலுக்கு வாய்ப்பளித்து காங்கிரஸ் ரேபரேலியையும் வீணாக்க முயற்சித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளனர்.
காந்தி குடும்பத்தின் தொகுதியான அமேதியில் சஞ்சய் காந்தியும் கூட 1977 தேர்தலில் தோல்வியுற்றார். இத்தனைக்கும் சஞ்சய் 1976 இல் அமேதியின் இளைஞர்களுக்காக ஸ்ரம்தாம் எனும் பெயரில் ஒரு சிறப்பு முகாமை நடத்தி ஆதரவை பெற்றிருந்தார். இதற்காக அவர் 2019 க்கு பின் ராகுல் செய்தது போல் சஞ்சய் அமேதியை கைவிடவில்லை. இந்த தொகுதியுடன் தொடர்ந்து நெருக்கம் காண்பித்ததால், மீண்டும் அமேதியில் 1980 இல் போட்டியிட்ட சஞ்சய் காந்திக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், தொடர்ந்து 2004 முதல் மூன்று தேர்தலில் வெற்றிகனியை சுவைத்த ராகுலுக்கு 2019 இன் தோல்வி முற்றிலும் அமேதியிலிருந்து விலக்கி வைத்து விட்டது.
இந்தமுறை ரேபரேலிக்கு மாறிய ராகுலிடம் பல சவால்கள் நிறைந்துள்ளன. கடந்த தேர்தலை போல் இந்தமுறை பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. இக்கட்சியின் தலைவரான மாயாவதி ரேபரேலியில் அதிரடியாக தம் வேட்பாளரை அறிவித்து விட்டார். இங்கு சுமார் 34 சதவிகிதம் தலித் சமூக வாக்குகள் உள்ளன. இங்கு பாஜக வேட்பாளரான தினேஷ் பிரதாப் சிங், 2018 வரை காங்கிரஸில் இருந்தவர். காந்தி குடும்பத்தின் வெற்றிக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர். அப்போது பாஜகவின் தினேஷுக்கு கிடைத்த ஆதரவாளர்களும் காங்கிரஸுக்கு எதிராகி விட்டனர்.
இதற்கு ராகுல் தரப்பினர் கூறும் காரணங்கள் ஏற்க முடியாதவைகளாக உள்ளன. அமேதியில் 1980 ஆம் ஆண்டு முதல்தான் காந்தி குடும்பத்தின் செல்வாக்கு வளர்ந்ததாகவும், ரேபரேலியில் முதல் தேர்தல் நடந்த1957 முதல் நான்கு தலைமுறையாக காந்தி குடும்பத்தின் பற்றுதல் உள்ளதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக ரேபரேலியில் அதிகப் பாசம் காட்டும் ராகுல் தனது தாய்க்கு பின்பான தொடர்பை தொடர விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், ஏற்கெனவே ராகுலை கடுமையாக விமர்சித்து வந்த அமேதி எம்பியான ஸ்மிருதி இராணிக்கு இந்த சூழல் சாதகமாகி விட்டது. ராகுலின் விலகலால் காங்கிரஸ் வாக்குப்பதிவிற்கு முன்பாகவே தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அமேதியில் சுமார் 25 வருடங்களுக்கு பின் காந்தி குடும்பம் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்கிறது. இந்த தொகுதி 1967 இல் புதிதாக உருவாக்கப்பட்டது முதல் 1996 வரை காங்கிரஸ் அமேதியை தன்வசம் வைத்திருந்தது. இடையில் 1977 இல் ரவீந்திர பிரதாப் பாரதிய லோக் தளம் சார்பில் ஒருமுறை வெற்றி பெற்றார்.
பிறகு 1998 இல் பாஜகவின் சஞ்சய் சிங் அமேதியை கைப்பற்றினார். இவரிடமிருந்து 1999 மக்களவை தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமேதியை மீட்டிருந்தார். பிறகு மகன் ராகுலுக்காக ரேபரேலிக்கு சோனியா மாறிய பின்பும் அமேதி 2019 வரை காங்கிரஸிடம் இருந்தது. 2019 இல் அமேதியை பாஜகவிற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ராகுலிடமிருந்து பறித்தார். இந்த தேர்தலில் அமேதியின் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை ரேபரேலியில் ராகுலும் தோல்வியுற்றால் காந்தி குடும்பம் உ.பி தொடர்பிலிருந்து முற்றிலுமாக விடுபடும் ஆபத்து நிலவுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!
நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!
“நியாயமா ஆண்டவரே...” கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!
“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!
செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!