திருச்சியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி முத்துக்குமார், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பன்றி வளர்ப்பு மற்றும் கள்ளச்சாராயத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது தம்பி சேகர் பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் தொழில்களில் ஈடுபட்டு வந்தார். தாதா கணக்காய் வலம் வந்த கேபிள் சேகர் பன்றி வளர்ப்பில் தனது அண்ணன் மகன்களுடன் ஏற்பட்ட மோதலால் 2011-ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் மறைந்த பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆனால், இதன் பிறகும் ரவுடியிசத்தை தொழிலாகக் கொண்டுள்ள இவ்விரு குடும்பங்களுக்கிடையே அவ்வப்போது மோதல் போக்கும், கொலை சம்பவங்களும் தொடர்கதையாகின. இவர்களால் அடிக்கடி கொலைகள் நிகழ்வது அரியமங்கலம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
இந்நிலையில் கேபிள் சேகர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சிலம்பரசன் 2021-ம் ஆண்டு அரியமங்கலம் காட்டுப்பகுதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மறைந்த கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார், சரவணன், ரஞ்சித் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் சிலம்பரசன் கொலை உள்பட பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முத்துக்குமார் இன்று மதியம் திருச்சி தஞ்சை சாலையில் உள்ள எஸ்ஐடி கல்லூரி எதிரே உள்ள டீக்கடை முன்பு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அதிமுக பிரமுகரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கயல்விழி சேகரின் மகன் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத் தீயாக பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மே 20-ம் தேதி முத்துக்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பழிதீர்க்கப்பட்டிருக்கிறார்.
திருச்சியில் பட்டப்பகலில் போக்குவரத்து நிறைந்த சாலையில் துப்பாக்கி முனையில் ரவுடி ஒருவர் பழிக்குப்பழியாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு
கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்... கங்கை அமரன் பதிலடி!
'விடுதலை2’ நடிகர்களுக்கு சம்பள பாக்கி; ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வாக்குவாதம்!
பகீர்... 'தலிபான் இந்தியா தலை ஜாக்கிரதை': வீட்டுச் சுவற்றில் எழுதிய கர்நாடகா போலீஸ்காரர்!