ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு

By காமதேனு

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வீடியோ காட்சிகளின் ஒளிபரப்பு ரத்தானதால் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மற்றும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் இந்த வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிடுவதற்கு வேட்பாளர்களின் முகவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகவர்கள் அமரும் பகுதியில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லூரி வாக்கு எண்ணும் மையம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து சுமார் 20 நிமிடங்கள் ஒளிபரப்பு ரத்தானது. அதிக வெப்பம் காரணமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு இந்த கேமராக்கள் செயலிழந்ததாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்து இருந்தார். இதனிடையே ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையமாக சித்தோடு அருகே உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 220க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள டிஜிட்டல் திரைகள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு திடீரென நள்ளிரவில் ஒரு சிசிடிவி கேமரா பழுதடைந்தது. இது குறித்து முகவர்கள் அளித்த தகவலின் பேரில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அதனை சரி செய்தனர். இதனிடையே இன்று மீண்டும் அதே மையத்தில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முகவர்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் திடீரென கோளாறு ஏற்பட்டு காட்சிகள் ரத்தாகியுள்ளது. குறிப்பாக குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியின் டிஜிட்டல் திரையில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா காட்சிகள்

இது குறித்து முகவர்கள் அளித்த தகவலை அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக பிரச்சினையை சரி செய்தனர். டிஜிட்டல் திரையில் கோளாறு ஏற்பட்டபோதும், சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் முழுமையாக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களில் பிரச்சினை ஏற்பட்டு வருவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE