அடுத்த அதிர்ச்சி... ஈரோட்டிலும் சிசிடிவி கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

By காமதேனு

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் திடீரென சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

நீலகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட அரசியல் கட்சியினருக்காக தனியாக டிவிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பு ரத்தானது. இது தொடர்பாக முகவர்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த பிரச்சினையை சரிசெய்தனர்.

நீலகிரி ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுது

அதிக வெப்பம் காரணமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் ஈரோட்டிலும் நடைபெற்று உள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அருகே உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 220க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிடும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ஒரு கேமரா மட்டும் பழுதானது. இது குறித்து முகவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், பழுதை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டது. ஒவ்வொரு கேமராவிற்கும் தனித்தனியாக ஐ.பி., எண்கள் வழங்கப்பட்டிருக்கும். அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த கேமரா ஒளிபரப்பு ரத்தானதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்தடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் கேமராக்கள் பழுதாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இது போன்ற பிரச்சினைகள் எதுவும் எழாத வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE