தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

By காமதேனு

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனைத் தொடர்ந்து, அவரது மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான எச்.டி.தேவகவுடாவுக்கு, எச்.டி.ரேவண்ணா, எச்.டி.குமாரசாமி உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். இதில் எச்.டி.குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மற்றொரு மகன் எச்.டி.ரேவண்ணா மாநில அமைச்சராக பதவி வகித்துள்ள நிலையில் தற்போது ஹோலேநரசிப்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி போராட்டம்

மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டார். கடந்த 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்ற போது, பிரஜ்வால் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து பிரஜ்வால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. பாலியல் வீடியோக்கள் தொடர்பாக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பிரஜ்வால் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தேவ கவுடா குடும்பத்தினர்

இந்த நிலையில் தேவகவுடா குடும்பத்திற்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக, அவரது மகன் ரேவண்ணா மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2022ம் ஆண்டு வரை அவர்களது வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவரும், அவரது மகளும் ரேவண்ணா மற்றும் பிரஜ்வால் ஆகியோர் தங்களுக்கு பாலியல் கொடுமை செய்ததாக கூறி ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து பாலியல் வழக்குகளில் தந்தையும் மகனும் சிக்கி உள்ளது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வருகிற மே மாதம் 7ம் தேதி கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கும் ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் பாஜகவிற்கு இது பின்னடவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE