அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!

By காமதேனு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் பல மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான "இந்தியா" கூட்டணியில் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் மட்டுமிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் இடப்பங்கீட்டில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திமுக தலைவரை சந்தித்துள்ள நிலையில் பாமகவும் திமுக கூட்டணியில் இணையும் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

திமுக, காங்கிரஸ் தலைவர்கள்

இதனால் தொகுதி பங்கீட்டில் தற்போது குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, தவாக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளையும் கைப்பற்றியது.

காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8, இடதுசாரிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டு 4, விசிக 2-ல் போட்டியிட்டு 2, முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் போட்டியிட்டு வென்றன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38-ல் திமுக கூட்டணி வென்றது. அதிமுக ஒரு இடத்திலும், புதுச்சேரியில் காங்கிரஸும் வென்றது.

ப. சிதம்பரம்

எதிர்வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளைக் கேட்டு 10 தொகுதிகளைப் பெற்றுவிட முடியும் என காங்கிரஸ் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் பாமக வருகையால் காங்கிரஸுக்கு இதில் பலத்த அடி விழுந்திருக்கிறது. திமுக முன்வைத்த உத்தேச தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கான இடங்களைக் குறைத்து அந்த இடங்களை பாமகவுக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது காங்கிரஸுக்கு தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் 10 இடங்கள் தர முடிவு செய்திருந்த திமுக தற்போது 4 அல்லது 5 என குறைக்கவும், இடதுசாரிகளுக்கு 4 இடங்கள் என உறுதி அளித்திருந்த நிலையில் அதை 3 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளதாம். விசிகவின் 2 தொகுதிகளில் ஒன்றை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறைக்கப்பட்ட அந்த இடங்களை பாமகவுக்கு வழங்க இருப்பதாக தெரிகிறது.

அதாவது பாமகவுக்கு 6 அல்லது 7 தொகுதிகளை ஒதுக்கவும், தன்னுடைய தொகுதிகளில் ஒரு தொகுதியை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் தர முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவுகளைத் தொடர்ந்து சென்னையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது திமுகவின் முந்தைய உத்தேச தொகுதி பங்கீடு, ராமதாஸ்- கமல்ஹாசன் வருகையைத் தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் சூழல் ஆகியவை குறித்து சிதம்பரத்திடம் டி.ஆர்.பாலு எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் தங்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளையாவது குறைக்காமல் கொடுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் அவரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் காங்கிரஸின் போக்கு குறித்து அதிமுக கவனமாக கண்காணித்து வருகிறது. தங்கள் பக்கம் வந்தால் 15 இடங்களை வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தகவல்களை அதிமுக தரப்பில் கசிய விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

11 மணி நேர போராட்டம்... ஆழ்துளையில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு; சிகிச்சை பலனின்றி பலியான சோகம்!

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!

61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE