தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று முதல் விசாரிக்கிறார்.
தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த நிலையில், சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, இன்று முதல் வழக்குகளை விசாரிக்க உள்ளார்.
ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயச்சந்திரன் விசாரித்து, தண்டனையை உறுதி செய்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரணை நடத்த உள்ளார்.
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று முதல் பட்டியலிடப்பட உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.