அது 1973-ம் ஆண்டு மே 11-ம் தேதி. அப்போதைய அரசியல் சூழலில் ‘வெளிவரவே வராது’ என்று பேசப்பட்ட எம்ஜிஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' தமிழகமெங்கும் பல்வேறு தடைகளையும் மீறி ரிலீசானது.
மதுரையில் மீனாட்சி தியேட்டரில் படம் வெளியானது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருந்ததால் படத்தைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது. அந்தக் கூட்டத்தில் அடித்துப் பிடித்து சட்டை கிழிய டிக்கெட் வாங்கி நண்பர்கள் புடைசூழ முதல்நாள் முதல் காட்சியில் பார்த்த தீவிர எம்ஜிஆர் ரசிகனான 21 வயது கருப்பு நிற துறுதுறு இளைஞனுக்கு பின்னாளில், தான் ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று புகழப்படுவோம் என அப்போது தெரியாது.
1952 -ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த் சிறுவயது முதலே தீவிர எம்ஜிஆர் ரசிகர். மதுரை மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தில் உறுப்பினர். எம்ஜிஆர் படங்கள் வெளியான அன்றே பார்த்துவிடுவார். அதுவும் தனியாகப் போகமாட்டார். குறைந்தது 10 நண்பர்களோடு செல்வது வழக்கம். படத்தைப் பார்த்துவிட்டு வந்து எம்ஜிஆரின் நடிப்பு, நடனக் காட்சிகளில் சுறுசுறுப்பு, சண்டைக் காட்சிகளில் அவரது வேகம், லாகவம் இவற்றைப் பற்றி எல்லாம் நண்பர்களிடம் அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்.
விஜயகாந்தின் தந்தை அப்போது மதுரையில் அரிசி ஆலை நடத்தி வந்தார். வசதியான குடும்பம். படம் பார்க்கப் போகும்போது நண்பர்களுக்கும் டிக்கெட் எடுப்பார். படம் முடிந்து ஹோட்டல் சாப்பாடும் விஜயகாந்த் செலவுதான். இந்தச் செலவுகளை சமாளிக்க, எம்ஜிஆர் படம் வெளியாகும் போதெல்லாம் தனது தந்தையின் அரிசி ஆலையில் அரிசி மூட்டைகள் காணாமல் போகும் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
அப்படித்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தையும் நண்பர்களோடு பார்த்தார் விஜயகாந்த். அது அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்திருந்த நேரம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாகி 10-வது நாளில் மே 20-ம் தேதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல். பிரச்சாரத்துக்குச் சென்ற எம்ஜிஆரோடு ரசிகர்களும் அவர் பின்னாலேயே கூட்டமாகச் செல்ல, அந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்தும் இருந்தார்!
அப்போது, எம்ஜிஆர் தன் கூடவே வரும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வேளை தவறாமல் உணவு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த உணவின் ருசியை பல ஆண்டுகளுக்குப் பின்னும் சொல்லிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்!
எம்ஜிஆர் மீதான ஆர்வம் சினிமாவை நோக்கித்தள்ள, தானும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு பஸ் ஏறினார் விஜயகாந்த். ஆனல், அது அவருக்கு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. பட வாய்ப்புக்களுக்காக சிரமப்பட்டார். தனது திறமையாலும் கடுமையான உழைப்பாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்று புரட்சிக் கலைஞராக உயர்ந்தார்.
1979-ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜயகாந்த் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் எம்ஜிஆர் ரசிகராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் எம்ஜிஆர் நடித்த ‘மதுரை வீரன்’ படத்தின் தலைப்பு விஜயகாந்த்துக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதே பாணியில் ‘மதுரை சூரன்’ என்று விஜயகாந்த் நடித்த படம் 1984-ம் ஆண்டு வெளியானது. எம்ஜிஆரை அவரது ரசிகர்கள் “வாத்தியார்” என்று அழைப்பார்கள். அதே ஆண்டில் ‘மெட்ராஸ் வாத்தியார்’ என்ற படத்திலும் எம்ஜிஆர் படம் போட்ட பனியன் அணிந்து நடித்தார் விஜயகாந்த்!
1972-ம் ஆண்டு எம்ஜிஆரின் ‘ராமன் தேடிய சீதை’ படம் வெளியான சமயம். ரசிகர்களோடு மதுரையில் இருந்து லாரியில் சென்னைக்கு வந்து சத்யா ஸ்டூடியோவில் கூட்டத்தோடு கூட்டமாக எம்ஜிஆரைப் பார்த்தார் விஜயகாந்த். திரையுலகில் முன்னணி நடிகரான பிறகு எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. நடிகர் ராஜேஷ் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் ராஜேஷின் இல்லத் திருமணத்துக்கு அவரது அழைப்பின் பேரில் எம்ஜிஆர். சென்றார். திருமண விழாவுக்கு விஜயகாந்தும் வந்திருந்தார். அவரை எம்ஜிஆரிடம் ராஜேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபின் எம்ஜிஆருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நேரம். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. அந்த சமயத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் துப்பாக்கியால் சுடும் காட்சியில் விஜயகாந்த் காயமடைந்து அதற்கு சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்தார்.
எம்ஜிஆருக்கு பேச முடியாததால், துப்பாக்கியால் சுடுவது போல ஜாடை காட்டி, ‘உடல்நிலை எப்படி இருக்கிறது?’ என்று சைகையாலேயே விஜயகாந்தை விசாரித்திருக்கிறார். அவரது அன்பில் நெகிழ்ந்து போனார் விஜயகாந்த். அங்கிருந்து புறப்படும்போது, விஜயகாந்தின் கைகளைப் பற்றிக்கொண்டு, “வீட்டுக்கு வாருங்கள்” என்று எம்ஜிஆர் அழைப்பு விடுத்தார். அதற்கான சந்தர்ப்பம் அமைவதற்குள் எம்ஜிஆர் காலமாகிவிட்டார். தலைவர் அழைத்தும் அவரது வீட்டுக்குப் போகமுடியவில்லையே என்ற வருத்தம் கடைசிவரை விஜயகாந்துக்கு இருந்தது.
எம்ஜிஆர் தனது உயிலில் கூறியபடி, அவரது மறைவுக்குப் பிறகு ராமாவரம் தோட்டத்தில், வாய்பேச இயலாத, காது கேளாத சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி இன்றும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி தனது பிறந்த நாளன்று அந்தப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அங்கு படிக்கும் குழந்தைகளுடன் சாப்பிடுவதை விஜயகாந்த் வழக்கமாக வைத்திருந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது துணைவியார் ஜானகி அம்மையாரிடமும் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் விஜயகாந்த். அவரை ‘அம்மா’ என்றுதான் அழைப்பார். ராமாவரம் தோட்டத்துக்கு அவ்வப்போது குடும்பத்துடன் செல்லும் விஜயகாந்த், ஜானகி அம்மையாரிடம் உரையாடி, அங்கு சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கம்.
எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திய TN W 2005 என்ற வெளிர் நீல நிற பிரச்சார வேனை 1996-ம் ஆண்டு ஜானகி அம்மையாரிடம் தனக்கு பரிசாகக் கேட்டார் விஜயகாந்த். மறுப்பேதும் சொல்லாத அம்மையார், எம்ஜிஆர் பயன்படுத்திய அந்த வேனை விஜயகாந்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
எம்ஜிஆர் வழியைப் பின்பற்றி அவரைப் போலவே விஜயகாந்தும் 2005-ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார். மதுரையில் நடைபெற்ற தேமுதிக தொடக்க விழா திடலுக்கு ‘சென்டிமென்டாக’ எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்திலேயே விஜயகாந்த் வந்தார். பின்னர், தேர்தல் பிரச்சாரத்துக்கும் அந்த வேனைப் பயன்படுத்தினார்.
எம்ஜிஆரைப் போலவே திரையுலகில் விஜயகாந்த் கஷ்டப்பட்டு முன்னேறியவர். அவரைப் போலவே சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து பெயர் பெற்றவர். எம்ஜிஆர் மாதிரியே பலருக்கும் உதவியவர். எத்தனையோ பேரை கைதூக்கி விட்டவர். சினிமாவில் வாய்ப்பு தேடிவந்த புதியவர்கள் பலருக்கு வாய்ப்பளித்தவர்.
முன்பெல்லாம் திரைப்படக் கல்லூரி மாணவர்களை தமிழ்த் திரையுலகம் அவ்வளவாக திரும்பிப் பார்க்காது. ‘ஊமை விழிகள்’, ‘கேப்டன் பிரபாகரன்’ என அடுத்தடுத்து அந்த மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களையும் உற்சாகப்படுத்தினார் விஜயகாந்த். அந்த அடிதொட்டு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரும் சாதனை சிகரம் தொட்டார்கள்.
எல்லோரும் விஜயகாந்தை ‘கருப்பு எம்ஜிஆர்’ என்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர் தான் ‘சிவப்பு விஜயகாந்தாக’ வாழ்ந்திருக்கிறார் - வலைப்பதிவர் ஒருவரின் இந்தப் பகிர்வு எத்தனை நிதர்சனம் என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. அரசியலில் வேண்டுமானால் விஜயகாந்தின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கலாம். ஆனால், ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று புகழப்பட்ட அவரது மனித நேயம் விமர்சிக்கப்பட முடியாதது!