தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 28ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 28ம் தேதி வியாழக்கிழமை மிலாடி நபி, இன்று காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் பலரும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
இதற்காக தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், இன்றுடன் விடுமுறை நாட்கள் முடிவடைவதால், அனைவரும் மீண்டும் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் பயணிகள் டிக்கெட் புக் செய்வதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதாவது, 3 முதல் 5 மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்தில் ஒரு டிக்கெட் விலை 4,620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் 4,700 ரூபாயாகவும், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் 4,710 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 4,510 ரூபாயாகவும், திருச்சியில் இருந்து சென்னைக்கு 4,600 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வால் பயணிகள் சென்னை திரும்ப முடியாமல் அவதி அடைந்துள்ளனர். விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் சிரமம் இன்றி ஊர் திரும்ப அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்! ’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..! மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது! சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ! பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!