இறந்த செல்லப்பிராணிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், இறுதிச் சடங்குகள் - புதுச்சேரியில் நெகிழ்ச்சி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்த தனது செல்லப்பிராணிக்கு, அதன் உரிமையாளர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மாலை அணிவித்து இறுதி சடங்குகள் செய்து வீட்டிலேயே அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014 ம் ஆண்டு சிறிய அளவில் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்.

ரேம்போவை தனது குடும்பத்தில் ஒருவராக பார்த்த அவர் அதற்கு என்னென்ன உணவுகள் வேண்டுமோ அவையெல்லாம் தேடித் தேடி வாங்கி தந்து வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட ரேம்போ நேற்று திடீரென உயிரிழந்தது. ரேம்போவின் மறைவு மதியின் குடும்பத்தினருக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரேம்போவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள்

தனது செல்லப்பிராணி இறந்ததை ஊர் முழுக்க தெரியப்படுத்த வேண்டும் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவர்கள் புதுச்சேரி முழுவதும் ஒட்டினர்.

மேலும் வீட்டில் முன்பு பந்தல் அமைத்து சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி அனுப்பினர். உறவினர்களும் மாலையுடன் வந்து ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ரேம்போவுக்கு அனைத்து சடங்குகளையும் செய்து தனது வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE