“பிரேக்-அப்பான காதல் மீண்டும் மலருவதற்குக்கூட கண நேரம் போதும். ஆனால், பிரிந்த கட்சிகள் திரும்பவும் கைகோக்க கால அவகாசம் தேவைப்படும் என்பதுதான் என்டையர் பொலிடிக்கல் சயின்ஸ்(!) படித்த அரசியல் மேதைகளின் இறுதி முடிவு. அந்த ட்ரெண்டை அண்ணன் விஜய் உடைத்துவிட்டார்.
ஆடியோ லாஞ்ச் ரத்துசெய்யப்பட்டதால் அரபிக் கடல்வரை எழுந்திருக்கும் அரசியல் அலை… திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சியினரையும் அரண்டுபோக வைத்துவிட்டது. உடைந்த கூட்டணிகளை ஒட்டவைக்கும் முயற்சி தொடங்கிவிட்டது. "ஆடியோ லாஞ்ச் இல்லைன்னா என்ன, ஆட்சியைப் பிடிச்சுட்டாப் போச்சு என்று வீறுகொண்டு எழுந்திருக்கும் எங்களை இனியும் விளையாட்டாக எண்ணாதீர்கள்…” என்று வீடியோ பேட்டி ஒன்றில் விஜய் ரசிகர் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
‘ஆடியோ’ விவகாரத்தால் அரசியல் கட்சிகள் ஆடிப்போயிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. குறிப்பாக, அறிவாலயம் அல்லோலகல்லோலப்பட்டிருந்தது. “அவசரப்பட்டு தடை பண்ணி ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனை அரசியல் ரிவெஞ்ச் ஃபங்ஷனா மாத்திட்டோமோ? தடை அதை உடைன்னு தளபதியோட தம்பிகள் தம் கட்ட ஆரம்பிச்சிட்டாங்களே…” என்று உடன்பிறப்புகள் உதறலுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
“அரசு ஊழியர்கள் ஆதங்கத்துல இருக்காங்க… ஆசிரியர்கள் ஆத்திரத்துல இருக்காங்க… இப்ப மட்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் வந்துடுச்சுன்னா ஒரேயடியா நம்மளை ஓரங்கட்டிடுவாங்களே” என்று ‘ஓசி’ புகழ் பொன்முடி முதல் உத்தரப் பிரதேச சாமியார் புகழ் உதயநிதி வரை பலரும் புலம்பிக்கொண்டிருந்தனர்.
ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் ரத்தத்தின் ரத்தங்கள் கொதித்துக்கொண்டிருந்தனர். “பாஜகவுக்குப் பகிரங்கமா ‘பை’ சொல்லிட்டதால பழைய பலத்தை அடைஞ்சிட்டோம்னு ஆனந்தமா இருந்தோம். இப்போ, அதுக்கும் ஆப்பா?” என்று அதிமுகவினர் பதறிக்கொண்டிருந்தனர்.
கமலாலயத்திலோ, “இதுக்கெல்லாம் கவலை ரியாக்ஷன் கொடுக்கணுமா? கலகலவெனச் சிரிக்கணுமான்னு தெரியலையே?” என்று தாமரைக் கட்சித் தலைவர்கள் தவித்துக்கொண்டிருக்க, அண்ணாமலை மட்டும் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
‘ஆடியோ, வீடியோ ரிலீஸ் பண்ணவச்சு ஆனானப்பட்ட தலைவர்களை ஓடவிட்டோம். இப்போ ஆடியோ ரிலீஸ் சர்ச்சையை வைச்சு ஆட்சியைப் பிடிச்சுடலாம்னு ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்களே… இதுக்கு எடப்பாடியையே மறுபடியும் சி.எம் ஆக்கிட்டா, பாஜக திட்டங்களை படிப்படியா இறக்கிடலாமே. இனி அநாவசியமா எதுவும் பேசக் கூடாது. ‘அதிமுகவுக்கு சப்போர்ட் பண்ணாத அண்ணாதுரை’ன்னு அறிக்கை விடுற ப்ளானைக்கூட கேன்சல் பண்ணிடலாம். இனி, சநாதனம்… சாரி சமாதானம்!’ என்று யோசித்த அண்ணாமலை, அடுத்த நொடியே அதிரடியாக அதிமுக தலைமையகத்துக்குப் புறப்பட்டார்.
“பாஜகவைப் பங்கம் பண்ணக்கூடாதுன்னு பழனிசாமி அண்ணன் பலமா ஆர்டர் போட்டுட்டார். ‘டிராமா பண்றாங்க’ன்னு டிஎம்கேகாரங்க சொல்லலாம்… ஆனா, மோடி கவர்ன்மென்ட் ஈடியை வச்சு இடிக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு கவலையாத்தான் இருக்கு” என்று அதிமுக தலைவர்கள் அரற்றிக்கொண்டிருந்த தருணத்தில், அண்ணாமலை உள்ளே நுழைந்தார்.
அனைவரும் ஆனந்த அதிர்ச்சியில் அவரை வரவேற்று அளவளாவத் தொடங்கினர். “இனி மாஸ்டர் என்ன... ஜெயிலரே வந்தாலும் நம்மளை ஜெயிக்க முடியாது” என்று அவர்கள் மகிழ்ந்திருந்த வேளையில், ஜெயக்குமாரின் வாட்ஸ்-ஆப்பில் வந்து விழுந்தது ஓர் அறிக்கை. ‘தமிழ்த் தடாகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று கர்நாடகத் தேர்தலில் தோற்ற சி.டி.ரவி, எக்ஸ் தளத்தில் கம்பீரமாக எழுதியிருந்தார். அடுத்த நொடியே, பிரஸ் மீட் பக்கம் எட்டிப்பார்த்த பிரதமர் மோடி போல கப்சிப் ஆனது அதிமுக தலைமையகம். ‘இலையில் மலர்ந்த தாமரை’ - கூட்டணி மீண்டும் முறிந்தது!