சென்னை: உலக பட்டினி தினத்தையொட்டி, நாளை (மே 28) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டனர். தற்போது வரை உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வந்தார்.
கடந்த ஆண்டுபோல, இந்த ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்க உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்நிலையில், ‘இல்லாதோருக்கு உணவு வழங்குவோம்’ என்றகருத்துடன் வரும் 28-ம் தேதிஉலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
» சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரளா செல்லும் சாலையில் விவசாயிகள் மறியல்
» ‘இண்டியா’வின் வெற்றியே கருணாநிதிக்கு காணிக்கை: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் உறுதி
இதுதொடர்பாக தவெக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, ‘பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான மே 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள்நலப் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சி தொடங்குவதற்கு முன்பாக, கடந்த ஆண்டு இதேபோல உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.