சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரளா செல்லும் சாலையில் விவசாயிகள் மறியல்

By KU BUREAU

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீராதாரத்தைப் பாதிக்கும் வகையில், சிலந்தி ஆற்றின் நடுவே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில்,கேரளா செல்லும் சாலையில் ஒன்பதாறு சோதனைச் சாவடி அருகே நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இதுகுறித்து சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி கூறும்போது, “அமராவதி அணையின் நீராதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே கடந்த 6 மாதங்களாக தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டுமானப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தினமும் 50 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வெட்கக்கேடானது. காவிரி நடுவர் மன்ற உத்தரவுகளை மதிக்காமல் கேரள அரசு செயல்படுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து வழிகளையும் மறித்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் இருந்துதமிழகம் வந்த வாகனங்கள், அமராவதி நகர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியல் போராட்டத்தையொட்டி, உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட் டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE