வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

By காமதேனு

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவுவதால் கோடை வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலையை விட 9 டிகிரி வரை அதிகரித்து, 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் உயரக்கூடும் என்று வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இந்த நிலையில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வெயில் கொடுமையால் சுருண்டு விழுந்து நேற்று உயிரிழந்தனர்.

வெயில்

அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை மிக அதிகமாக இருந்தது. கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருந்தது.

அத்துடன் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியேற தயங்கி வருகின்றனர்.

வானிலை மையம்

இந்த நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE