‘இண்டியா’வின் வெற்றியே கருணாநிதிக்கு காணிக்கை: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் உறுதி

By KU BUREAU

சென்னை: இண்டியா கூட்டணியின் வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம் என்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்:

தமிழக அரசியல் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே மு.கருணாநிதியைப் போல் பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரை காண்பது அரிது. கடந்த 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கருணாநிதி மட்டுமே. பல சாதனைகள் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர்.

கடந்த 2023 ஜூன் 3-ம் தேதி தொடங்கிய கருணாநிதியின் நூற்றாண்டு இந்தாண்டு ஜூன் 3-ம் தேதி நிறைவடைகிறது. அரசு சார்பில் கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம், மெரினா கடற்கரையில் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்துள்ளன. திருவாரூரில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்றை கற்றுத்தருகிறது.

நூற்றாண்டு தொடங்கிய 2023 ஜூன் 7-ல் சென்னையில் கருணநிதி நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாக்களை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

பல தொகுதிகளில் தரமான நூலகங்களை இளைஞரணி உருவாக்கியிருப்பது கருணாநிதிக்கு பெருமை சேர்த்துள்ளது. மாவட்டவாரியாக பேச்சுப் போட்டிகள் நடத்தி சிறந்த 100 பேச்சாளர்களை இளைஞரணி தேர்வு செய்து வருகிறது.

மாணவரணி சார்பில் பல கல்லூரிகளிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டிருப்பதுடன், தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை மீண்டும் அனைத்துக் கல்லூரிகளிலும் உருவாக்கி வருகிறது.

இலக்கிய அணி சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கருணாநிதியின் சாதனைகளை எடுத்துரைக்கும் ரீல்ஸ்களை #கலைஞர் 100 என்ற ஹேஷ்டேக்கில் பார்க்கலாம். திமுகவின் ஒவ்வொரு அணி சார்பிலும் போட்டி போட்டுக் கொண்டு கருணாநிதியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது அரிய பணியாகும்.

திமுக என்றாலே சமூக நீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கருணாநிதி.

அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் திமுக மீது தாக்குதலை நடத்துகின்றனர்.

தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திமுகவின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

ஜூன் -3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள். தேர்தல் நடத்தை விதிகளை கவனத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் நடத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்.

ஜூன் 4-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்று வெற்றிக் கொடியேற்றுவோம். இண்டியாவின் வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம். கருணாநிதி நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE