கோயம்புத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவரும் கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை, கரூர் ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள் தான். நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றால் வாக்களிப்பது அவசியம். எனவே வாக்காளர்கள் எங்கு இருந்தாலும் மாலை 6 மணிக்குள் சென்று வாக்களித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கோவையில் வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு "கோவையில் பாஜக ஓட்டுக்கு பணம் தரவில்லை. அப்படி பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன். உளவுத்துறை, காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் என யாராவது ஒருவர் தொகுதிக்குள் பாஜகவினர் யாராவது வாக்களிக்க பணம் கொடுத்தார்கள், அல்லது கொடுக்க முயற்சித்தார்கள் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்" என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
மாலை ஆறு மணி வரை தான் வாக்குப்பதிவு நடைபெறும் என்கிற நிலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அண்ணாமலை 7 மணிக்குள் வாக்களிக்க வேண்டும் என்று தவறுதலாக கூறினார்.