முதல்முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியா விமானம் அசத்தல் சலுகை... பறந்து போய் வாக்களிக்கலாம்!

By காமதேனு

வாக்களிக்க விமானத்தில் செல்லும் 18 முதல் 22 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கட்டண சலுகை அறிவித்துள்ளது.

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் திருவிழாவின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. உலகின் மிக அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் தேர்தலாக இதில் பார்க்கப்படுகிறது. இதில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்களிப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை உணவகங்கள், போக்குவரத்து வாகனம் உள்ளிட்டவை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு விமான பயணத்தில் சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பல லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்களாக வாக்களிக்க உள்ளனர். அப்படி வாக்களிக்க செல்லும் முதல்முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலில் வாக்களிக்க விமானத்தில் செல்லும் 18 முதல் 22 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 19 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சலுகை ஜூன் 1-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் என்ன, இந்த சலுகையைப் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றிட பறந்து போயாவது வாக்களியுங்கள் மக்களே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE