இரண்டாக உடைகிறது தேவகவுடாவின் கட்சி... பாஜகவுடனான கூட்டணியால் பூகம்பம்!

By காமதேனு

பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வரிசையில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்தியா கூட்டணி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. தேவகவுடாவின் மகனும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவையும் சந்தித்து பேசினார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் பாஜக கூட்டணிக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானவுடனே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கேரள மாநில தலைவர் டி. தாமஸ், பாஜக கூட்டணியில் இணைய மாட்டோம் என அறிவித்தார். இதன் மூலம், மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது. எதிர்காலதத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி, மாநில நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பொறுத்தவரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ளது. பாஜகவுக்கு எதிராக தீவிரமாக இயங்கி வரும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்திருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் கேரள பிரிவு தலைவர்களுக்கு, தாய் கட்சியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் - குமாரசாமி அதிரடி!

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அடிப்படையே பாஜக எதிர்ப்புதான். பாஜகவுடன், ஜனதா தளம் கூட்டணி அமைத்த காரணத்தால்தான் மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவானது. கடந்த 1999ம் ஆண்டு, அப்போதைய கர்நாடக முதலமைச்சர் ஜே.எச். படேல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்ததால், எச் டி தேவகவுடாவும் சித்தராமையாவும் இணைந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உருவாக்கினர்.

கேரளாவில் மட்டும் இன்றி கர்நாடக பிரிவு தலைவர்களும் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் பல பிரிவுகளாக உடையும் அபாயம் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE