தமிழகமே கண்ணீரில் மூழ்கியது... நடிகர் விஜயகாந்த் திடீர் மரணம்... கதறும் தொண்டர்கள்!

By காமதேனு

தமிழகமே அதிர்ச்சி... நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயகாந்த் வீட்டில் குவிந்துள்ளனர். தொண்டர்கள் ‘கேப்டன்...’ என்று கதறியழுதப்படி ஆற்றமுடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவராக, தமிழ் திரையுலகின் நிரந்தர கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 18ம் தேதி இரவு, நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். “தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும், தொண்டையில் வலி இருப்பதால் அதன் சிகிச்சைக்காகவும் விஜயகாந்த் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று அப்போது தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக பலவாறாக செய்திகள் வெளியானதை அடுத்து, “தொண்டர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார்” என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 29-ம் தேதி காலை, ‘நடிகர் விஜயகாந்தின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதும் தேமுதிக தொண்டர்கள் மருத்துவமனையிலும், தேமுதிக தலைமை அலுவலகத்திலும் குவியத் தொடங்கினார்கள். பின்னர், நுரையீரல் சிகிச்சைக்காக விஜயகாந்த் நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காததால், டிரக்கியாஸ்டமி சிகிச்சைத் தருவது குறித்து மருத்து குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது இது தொண்டர்களை மேலும் கலக்கமடைய செய்தது.

வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் ஒருவரின் நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவும்போது வெளியில் இருந்து நேரடியாக ஆக்ஸிஜனை செலுத்தக்கூடிய வகையில் செயற்கை சுவாசப் பாதைக்கான டியூப் அமைக்கப்படுவதுதான் டிரக்கியாஸ்டமி.

நடிகர் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்பினார். பின்னர், தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கமான பரிசோதனைகளுக்காக மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி நடிகர் நடிகர் விஜயகாந்த் காலமானார்.

திரையுலகிலும், தமிழக அரசியலிலும் மிகப் பெரும் ஆளுமையாக வலம் வந்த விஜயகாந்த், லட்சக்கணக்கான தொண்டர்களையும், ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தி, நிரந்தரமாகத் துயில் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE